கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக நாகர்கோவில் சுற்றி வட்டார பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் பாய்ந்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மலையோர பகுதிகளான பேச்சிப்பாறை, கோதையார், மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று (24-ம் தேதி) பெய்த கன மழையால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொலோஞ்சி மடம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது பள்ளி சென்று திரும்பிய மாணவ மாணவிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த மலை கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கிய மாணவ மாணவிகள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இந்த பகுதியில் பாலம் அமைப்பதற்கு 2. 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் இதுவரை பாலப் பணிகள் நடைபெறவில்லை என மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அடிக்கடி இது போன்று காட்டாற்று வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்குவது தொடர் கதையாகி உள்ளதாகவும் உடனடியாக இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.