அதிக பாரம் ஏற்றி வந்த 8 வாகனங்களுக்கு அபராதம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில், சரக்கு வாகனங்களில் விதியை மீறி, அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், வாலாஜாபாத், சாலவாக்கம் உள்ளிட்ட பகுதியில் நேற்று(செப்.19) வாகன தணிக்கை செய்தார். இதில், எம். சாண்ட், ஜல்லி போன்றவற்றை ஏற்றி சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்ததில், ஆறு சரக்கு வாகனங்களில் அனுமதிக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததும், இதில், ஒரு வாகனம் தகுதிச் சான்று இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தகுதி சான்று இன்றி இயங்கிய வாகனம் சிறை பிடிக்கப்பட்டு வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதிகளவு பாரம் ஏற்றி வந்த ஆறு சரக்கு வாகனங்கள் மற்றும் அதிகளவு பயணியரை ஏற்றி வந்த இரண்டு மேக்சி கேப் வாகனம் என, மொத்தம் எட்டு வாகனங்களுக்கு 3 லட்சத்து 65, 900 ரூபாய் அபராதம் விதித்தார்.