
பிரபல ரவுடி மனைவி செங்கல்பட்டில் கைது
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அசோக், 28. 'ஏ' பிளஸ் ரவுடிகள் பட்டியலில் உள்ள இவர், கடந்த 2022ம் ஆண்டு, செங்கல்பட்டு நகர காவல் நிலையம் எதிரே நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுதலையான அசோக், தலைமறைவானார். கடந்த 28ம் தேதி சிங்கபெருமாள்கோவில் அடுத்த ஆப்பூர் காப்புக்காட்டில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் பிடிக்க சென்ற போது, அவர் போலீசாரை தாக்க முயன்றார். இதனால், இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அசோக் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவி ஜெசிகா, 26, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் (ஏப்ரல் 2) இரவு, செங்கல்பட்டில் கைது செய்தனர். இவர் அசோக்குடன் இணைந்து கஞ்சா விற்பனை, நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. மேலும், ஜெசிகா மீது ஏற்கனவே கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.