செங்கல்பட்டு மாவட்டம்
பல்லாவரம் அருகே சங்கர் நகரில், கள்ளக்காதல் பிரச்சனை காரணமாக 33 வயதான பாக்கியலட்சுமி என்பவரை, 40 வயதான ஞான சித்தன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி, திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரை பிரிந்த பிறகு, வேறு ஒருவருடன் உறவில் இருந்த அவர், பின்னர் ஞான சித்தனுடனும் உறவு வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலும், பாக்கியலட்சுமி வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டதற்காக, ஞான சித்தன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று இரவு, பாக்கியலட்சுமி தனது பிள்ளைகளை வேறொரு அறையில் பூட்டிவிட்டு, ஞான சித்தனுடன் மது அருந்தியுள்ளார். இதன்போது, இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில், அருகில் இருந்த கடப்பா கல்லை எடுத்து, பாக்கியலட்சுமியின் தலையில் பலமுறை அடித்துள்ளார். அதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலைக்குப் பிறகு, ஞான சித்தன் நேராக சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று, தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, பாக்கியலட்சுமியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.