செங்கல்பட்டில் அரசுப்பள்ளி கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த 53 மடிக்கணினிகள் திருட்டு - செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டிய இலவச மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த மடிக்கணினிகள் மாவட்ட முதன்மைக் கல்வித்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னலை உடைத்து, ஜன்னல் வழியாக மடிக்கணினிகள் திருடப்பட்டதை பள்ளி மாணவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். பள்ளி நிர்வாகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தகவல் கொடுத்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மடிக்கணினி அறையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகளைச் சோதனை செய்து பார்த்ததில் 53 மடிக்கணினிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் நேற்றைய தினம் மடிக்கணினிகள் திருடிய மூன்று மாணவர்களை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில், இதுவரை 11 மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மாணவர்கள் சிக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.