செங்கல்பட்டு மாவட்டம் சென்னேரி அடுத்த மதுரா கருப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (53). இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்ள நிலையில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ரவியின் வீட்டருகே அவரது தந்தை நரசிம்மனும், தாயும் வசித்து வருகின்றனர். வயது முதிர்ந்த தனது தாய்க்கு கண்ணில் ஆபரேஷன் செய்துள்ளதால் தாய், தந்தைக்கு உணவு கொடுப்பதற்காக ரவி சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ரவியின் தம்பி மகனான காமேஷ் (18) தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் ரவியை முகம் மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் வெட்டி உள்ளார். இதனைக் கண்ட ரவியின் தந்தை நரசிம்மன் (77) தடுக்க முயன்ற போது அவரையும் வெட்டி விட்டு காமேஷ் தப்பியோடினார்.
இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வரும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்த நரசிம்மன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் ரவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.