ஜவுளி கடை முன் வாலிபர்கள் குவிந்ததால் தள்ளு -முள்ளு
ஈரோடு ஜவுளி கடை முன் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் குவிந்ததால் தள்ளு -முள்ளு ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காந்திஜி சாலையில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் சலுகை விலையில் இன்று (செப்.23) சட்டை, பேண்ட் விற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பகிரப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அந்த அறிவிப்பின்படி டி ஷர்ட் 50 ரூபாய்க்கும், ஷர்ட் 100 ரூபாய்க்கும் பேன்ட் 250 ரூபாய்க்கும், லேடிஸ் டாப்ஸ் 120 ரூபாய்க்கும் சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை இந்த ஜவுளிக்கடையில் விற்பனையானது நடைபெற்றது. சலுகை விலையில் விற்கப்படுவதால் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அந்த ஜவுளி கடை முன் குவிந்தனர். மேலும் ஒரே நேரத்தில் அனைவரும் கடைக்குள் போட்டி போட்டுக் கொண்டு நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஜவுளிக்கடை முன்பு ஆயிரக்கணக்கான வாலிபர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடை நிர்வாகத்தினர் திணறினர். மேலும் அந்தப் பகுதி ஈரோடு காந்திஜி ரோடு பகுதி என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.