பவானியில் வழக்கறிஞரை தாக்கிய இளைஞர்கள்; சிசிடிவி காட்சி
ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பா. பா. மோகனிடம் பணிபுரிபவர், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் பரத். இவர், இன்று மதியம், பவானி பஸ் நிலையம் எதிரில் உள்ள முருகன் பேக்கரிக்கு பப்ஸ் வாங்க சென்றுள்ளார். அப்போது, தனது இரு சக்கர வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்தியுள்ளார். அப்போது, பேக்கரியில் வேலை செய்யும், பவானி அடுத்த குருப்பநாய்க்கன்பாளையம் அருணகிரிவீதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர், கடைக்கு முன்பு, வண்டியை நிறுத்த வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இப்பிரச்சினையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அசோக்குமார், வழக்கறிஞர் பரத்தை கடுமையாக தாக்கியுள்ளார். இதைப்பார்த்து, பேக்கரியில் வேலை செய்யும், பவானி பெருமாள்புரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரும் தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையை விலக்கினர். இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் பரத், பவானி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வரும் நிலையில், வழக்கறிஞரை தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.