ஈரோடு: மளிகை கடை நடத்தும் பெண் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, பூபதி சாலையைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மனைவி பாக்கியம் (51). பாக்கியம் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தம்பி யுவராஜிக்கு தனது இளைய மகளை திருமணம் செய்து வைக்க பாக்கியம் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் வயது அதிகம் என்பதால் திருமணத்திற்கு இளைய மகள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக பாக்கியம் விரக்தியில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று(அக்.5) வீட்டில் இருந்த பாக்கியம் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாக்கியத்தின் இளைய மகள் கூச்சலிட்டுள்ளார். சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாக்கியத்தை மீட்டு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பாக்கியம் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.