சென்னை: அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவை - ராமதாஸ்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு விருப்புவெறுப்பற்ற, நடுநிலையான காவல்துறை உயரதிகாரிகளின் கண்காணிப்பில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலை எங்கேனும் அவமதிக்கப்பட்டால் அதற்கான முதல் எதிர்ப்புக்குரல் வருவது என்னிடம் இருந்துதான். அத்தகைய தன்மை கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, அம்பேத்கரின் சிலைகளை உடைக்கப்போவதாகவும், அவமதிக்கப்போவதாகவும் காவல்துறையினர் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவது பொய்களை புனைவதில் கூட அவர்களுக்கு புத்தியில்லை என்பதையே காட்டுகிறது. கடலூர் மாவட்ட காவல்துறையினரின் இத்தகைய மோசமான அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக இப்படியொரு அவதூறைப் பரப்பும் காவல்துறை, கடந்த காலங்களில் செய்யப்பட்டது போன்று திட்டமிட்டு அம்பேத்கர் சிலையை அவமதித்துவிட்டு, அந்தப் பழியை பாமகவினர் மீது போடுவதற்கு தயங்காது. எனவே, கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு விருப்புவெறுப்பற்ற, நடுநிலையான காவல்துறை உயரதிகாரிகளின் கண்காணிப்பில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.