சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்பவும் - ஓபிஎஸ்
அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மருத்துவர்களுக்கான பதவி உயர்வினை அளிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருவதன் காரணமாக 'மருத்துவம் இல்லை' என்ற அபாயகரமான நிலையை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. மருத்துவர்களின் வாழ்க்கையோடும், மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் தி.மு.க. விளையாடிக் கொண்டிருக்கிறது. மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்புவது மற்றும் மருத்துவர்களுக்கான பதவி உயர்வினை அளிப்பது போன்றவற்றை விரைவுபடுத்த வலியுறுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. தி.மு.க. அரசின் இதுபோன்ற மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மருத்துவர்களுக்கான பதவி உயர்வினை அளிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.