தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ. 60, 000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார்.
சென்னை உட்பட மாநிலம் முழுவதும் இன்று மட்டும் மொத்தம் 379 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.