கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு
கதீட்ரல் சாலையில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் முதலான சிறப்பு அம்சங்களுடன் கூடியகலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை (அக் 7) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைய திட்டமிடப்பட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது. இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு - ரூ. 100/- சிறியவர்களுக்கு - ரூ. 50/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.