சென்னை: இளம்பெண் கடத்தி கொல்லப்பட்ட வழக்கு முடித்துவைப்பு
சென்னையில் இளம்பெண் கடத்திக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புகார் தவறானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த காமாட்சி என்ற இளம்பெண் சில ரவுடிகளால் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இப்படியொரு சம்பவத்தை திரைப்படங்களில் கூட பார்த்தது இல்லை. அந்தப்பெண் குறித்து முன்பே ஏன் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கவில்லை? என முறையீடு செய்த வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். மேலும் நீதிபதிகள், இதுபோன்ற விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என முறையீடு செய்த வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தனர்.