தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப். 28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகியுள்ளார். இவருக்கு அமைச்சரவையில், துரைமுருகனுக்கு அடுத்ததாக 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு, வி. செந்தில் பாலாஜி, சா. மு. நாசர், கோவி. செழியன், ஆர். ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்கள், செப். 29-ல் பதவியேற்றதுடன், செப். 30-ம் தேதி துறை அலுவலகங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதுதவிர க. பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர். எஸ். ராஜகண்ணப்பன், சிவ. வீ. மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் துறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், புதிதாக சேர்ந்துள்ள அமைச்சர்கள் 4 பேரில் கோவி. செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதியவர்கள். எனவே, புதிய அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் வரும் அக். 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.