விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை விமான சாகச நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இறந்தவர்கள் ஐவருமே மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்து போகவில்லை. இறந்துதான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். 15 லட்சம் மக்களும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் வந்துவிட முடியாது. எங்கெல்லாம் விமான சாகச நிகழ்ச்சி தெரியுமோ அங்கிருந்தெல்லாம் கூட மக்கள் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கே வராத சிலர்தான் பூதக்கண்ணாடியை வைத்து குற்றம் கண்டுபிடிக்கின்றனர். எனவே இதை அரசியலாக்க வேண்டாம்.
இந்தியாவின் விமானப்படை கட்டமைப்பை உலகுக்கு எடுத்துக் காட்டும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி இது. இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் வெயில் தாக்கமும், நீர்ச்சத்து குறைபாடும்தான். மருத்துவ வசதி இல்லையென்று சொல்லமுடியாது. காரணம் மெரினாவுக்கு அருகே தான் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என அனைத்தும் உள்ளது. இப்படி ஒரு கட்டமைப்பு உலகத்திலேயே எங்கும் கிடையாது என அவர் தெரிவித்தார்.