சிறப்பாக செயல்படும் மாநிலங்களை கட்டுப்படுத்தும் அணுகுமுறையை நிதிக்குழுக்கள் மாற்றிக் கொண்டு, அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 16-வது நிதிக்குழு தொடர்பான மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலர் த. உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதிக்குழுக்கள் தங்கள் அணுகுமுறையை மறு பரிசீலனை செய்வது அவசியம். இதுதவிர, மாநிலங்களின் செயல்திறனுக்கு ஊக்கமளிக்கும் ஒரு கட்டமைப்பை ஏற்றுக் கொள்வதுடன், வளரும் மாநிலங்களை கட்டுப்படுத்துவதற்கு பதில் அனைத்து மாநிலங்களும் முன்னேறும் சூழலை உருவாக்க வேண்டும். மேலும் சமபங்கு மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் மிகவும் சமநிலையான அணுகுமுறைக்காக நாம் அனைவரும் உழைக்க முடியும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.