சிவகாசி: களை கட்டிய பட்டாசு விற்பனை
சிவகாசி பட்டாசு விற்பனை கடைகளில் விறுவிறுப்பு. அலை மோதும் பட்டாசு பிரியர்கள். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நேற்று நடைபெற்றன. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சமாக இருக்கும் பட்டாசுகள் விற்பனை உச்சகட்ட விறுவிறுப்பில் உள்ளன. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதியான வெம்பக்கோட்டை, திருத்தங்கல், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை கடைகள் உள்ளன. சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் தரமான பட்டாசுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், வெளியூர்களை விட சிவகாசி பகுதியில் பட்டாசுகள் விலை குறைவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான பட்டாசு பிரியர்கள் சிவகாசிக்கு குவிந்தனர். நேற்று தீபாவளிக்கு முந்தைய ஞாயிறு கிழமை விடுமுறை நாள் என்பதால், ஏராளமான பட்டாசு பிரியர்கள் பட்டாசு கடைகளில் குவிந்துள்ளனர். இதனால் சிவகாசி பகுதியில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனை கடைகளிலும் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றன. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமான பட்டாசு பிரியர்கள் வந்திருந்து பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.