சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் கைப்பற்றப்பட்ட விவகாரம்
மோட்டர் வாகன ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைதரகர்களிடமிருந்து
ரூ. 1 லட்சம் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த அக். 16 ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த பணியாளர் சபரிசெல்வம், இடைத்தரகர்கள் கோவிந்தராஜ், பெருமாள், மாரிச்சாமி, தினேஷ்குமார், லட்சுமணன், வெங்கடேஷ் ஆகியோரிடம் இருந்து மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 620 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன், ஒப்பந்த பணியாளர் சபரிசெல்வம் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 8 பேர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.