இராஜபாளையம்: நேரடி கள ஆய்வில் மாவட்ட ஆட்சியர்.....
இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் கள ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் மூலம் நேற்று காலை 9 மணி முதல் 21.11.2024 இன்று காலை 9 மணி வரை நடைபெற்ற முகாமின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி இரண்டாம் நாளான இன்று இராஜபாளையம் வட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மாவட்ட ஆட்சியர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அதில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை சேகரித்து வரும் பணிகளையும், தண்ணீரில் கலந்துள்ள குளோரின் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பாக நேரில் பார்வையிட்ட பின், நகராட்சி தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்தும், உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.