திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி தொடர் விடுமுறையால், பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலமான, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை இன்றும் தொடர்ந்தது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செல்ல பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில பக்தர்களின் வருகை கூடுதலாக உள்ளன. அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பொது தரிசன பாதையில் சுமார் 2 மணி நேரமும், ஐம்பது ரூபாய் கட்டண தரிசன பாதையில் ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள், உண்ணாமுலை அம்மன் மற்றும் கால பைரவர் சந்நிதிகளில் வழிபட்டனர். முன்னதாக, விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகர் உள்ளிட்ட சுவாமிகளை தரிசித்தனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பொது போக்குவரத்து மட்டுமின்றி கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்தனர். இவர்களது வாகனங்கள் வட மற்றும் தென் ஒத்தவாடை தெரு, பே கோபுரத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் தேரடி வீதி, பெரியத் தெரு, பே கோபுரத் தெரு உள்ளிட்ட மாட வீதி, வட மற்றும் தென் ஒத்தவாடை தெருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.