
தூத்துக்குடி: போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சங்கரலிங்கபுரம் 3ஆவது தெருவில் உள்ள கிணறு அருகே அமர்ந்திருந்த ஒருவர் போலீசாரை அவதூறாகப் பேசியபடி கொலை மிரட்டல் விடுத்து ஓடினாராம். போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் சங்கரலிங்கபுரம் 2ஆம் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகனான பெயிண்டர் ராஜா (37) என்பதும், 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.