தூத்துக்குடியில் தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பேரணி நடைபெற்றது. இதில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைப் பட்டா இடங்களை முறையாக அளந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட முன்னுரிமை வழங்க வேண்டும். பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கண் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாலுகா அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடை அமைக்க முன்னுரிமை வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.