திருவாரூர்: சாலை விபத்தில் தந்தை, மகள் பலி
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே உள்ள பெரியகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக வந்துள்ள சீனிவாசன், பெரிய கொத்தூரிலிருந்து திருவாரூருக்கு சென்று, புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்கிக் கொண்டு, சீனிவாசன், மனைவி உமா (40), மூத்த மகள் இளவரசி (16), இளைய மகள் சாரா (12) ஆகிய நான்கு பேரும் ஒரே ஸ்கூட்டி வாகனத்தில் வீடு திரும்பினர். அப்போது ஊட்டியாணி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, கூத்தாநல்லூரில் இருந்து மாவூர் நோக்கி வந்த தனியார் மெட்ரிக் பள்ளி வேன் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிகழ்விடத்திலேயே சீனிவாசனும், இளைய மகள் சாராவும் உயிரிழந்தனர். மனைவி உமா மற்றும் இளவரசி ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபாதிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.