மன்னார்குடி அருகே தென் கோவனூரில் ரேஷன் கடை திறக்கப்படாத கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட தெற்குப்படுகை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ரேஷன் குடும்ப அட்டைதாரகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதத்தில் ஒருமுறை தென்கோவனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி கோதுமை சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இன்றைய தினம் ரேஷன் கடையில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தெற்கு படுகை கிராம மக்கள் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று 11: 00 மணி வரை காத்திருந்தும் ரேஷன் கடை ஊழியர்கள் யாரும் வந்து கடையை திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கடைக்கு வந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் ஏன் தாமதமாக வருகிறீர்கள் என கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கிராம மக்கள் பொருட்கள் ஏதும் வாங்காமல் திரும்பிச் சென்றனர்.