ராமாபுரத்தில் போலீசார் மீது தாக்குதல்
ராமாபுரம், நெற்குன்றம், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் அசோக் பாண்டியன், (30) வளசரவாக்கம் போக்குவரத்து காவல் நிலைய போலீஸ்காரர். இவர், நேற்று (செப்.13) மாலை ராமாபுரம் அரச மர ஜங்ஷன் அருகே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பஜனை கோவில் சந்திப்பு வரை, இருசக்கர வாகனத்தில் சென்று போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தார். மீண்டும், அரசமர ஜங்ஷன் வரும்போது ஹுண்டாய் ஐ10 காரில் உரசினார். இதையடுத்து, அந்த காரில் வந்த மர்ம நபர்கள் இருவர், அசோக் பாண்டியனிடம் வாக்குவாதம் செய்து, அவரது சட்டையை பிடித்து கீழே தள்ளி விட்டனர். இதில் போக்குவரத்து காவலர் அசோக் பாண்டியனுக்கு, சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. கே. கே. நகர் இ. எஸ். ஐ. , மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.