மதுரவாயலில் டயர் வெடித்ததில் சரக்கு வாகன லாரி சாலையில் கவிழ்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரக்கோணத்தில் உள்ள தனியார் ஆடையகத்தில் இருந்து துணிகளை ஏற்றுக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சரக்கு வாகனத்தின் டயர் வெடித்ததில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் சிறுகாயங்களுடன் உயிர்த் தப்பினார்.
இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு பிரதான சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் ரோப் கயிறு கட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகன லாரியின் டயர் வெடித்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.