

திருவள்ளூர்: ரயில்கள் ரத்து; வெளி மாநில பயணிகள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பொன்னேரி ரயில் நிலையத்திற்கும் கவரப்பேட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லக்கூடிய 20 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் பொன்னேரி மீஞ்சூர் எண்ணூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே 14 மின்சார ரயில் சேவைகளை கூடுதலாக இயக்கியது. இந்த நிலையில் ஒரிசா மாநிலம் பூரியிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று வரவேண்டிய ரயில் சூளூர்பேட்டை ரயில் நிலையத்திலேயே சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை நோக்கி வந்த பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாயினர். எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் கும்மிடிப்பூண்டி அருகே பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலதாமதம் என ரயில் பயணிகளிடம் அறிவித்துள்ளார். ரயில் சூளூர்பேட்டையில் காலதாமதமாக நடுவழியில் நிறுத்தப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வேறு ரயில்களில் வெளியூர் செல்ல இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். அடிக்கடி எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது. கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பாதையை 6 வழி பாதையாக மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.