

பேராவூரணி: வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு
பேராவூரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு லாக்கர்களை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் 12 பவுன் தங்க நகை மற்றும் 12 கிலோ வெள்ளிப் பொருள்களையும் திருடிச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசேனன் (வயது 66) இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மருமகள் கடலூரில் மருத்துவம் முதுநிலை படிப்பு படித்து வருகிறார். மருமகள் மற்றும் பேரனைப் பார்ப்பதற்காக தேவசேனன் தனது மனைவியுடன் கடலூர் சென்று விட்டார். ஜோதி என்ற பக்கத்து வீட்டுப் பெண் வீட்டை வந்து பார்த்து செல்வது வழக்கம். 24ஆம் தேதி காலை வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி, தேவேந்திரனுக்குத் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தேவேந்திரனின் உறவினர் காந்தி என்பவர் வந்து பார்த்தபோது வீட்டில் இரண்டு லாக்கர்கள் திருடுபோயிருப்பது தெரிய வந்தது. அதில் 12 பவுன் நகையும் 12 கிலோ வெள்ளிப் பொருட்களும் இருந்ததாக தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடய அறிவியல் துறை நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாய் கொண்டுவரப்பட்டு சோதனைக்கு விடப்பட்டது. பூட்டிருந்த வீட்டை உடைத்து தலா 250 கிலோ எடையுள்ள நகை இருந்த லாக்கர்களை திருடிச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.