தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் அரசின் நியாய விலைக் கடைகளில் கோதுமை, பாமாயில் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. குறைந்த அளவே நியாய விலைக் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதால் பற்றாக்குறை பிரச்சினை நீண்ட காலமாக நிலவுகிறது. பேராவூரணி தாலுகாவில் 77 நியாய விலைக் கடைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடைகள் மூலம் பல ஆயிரக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நியாய விலையில் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மற்றும் பருப்பு, சீனி, பாமாயில் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக போதிய அளவு கோதுமை ஒதுக்கீடு செய்யப்படாததால் 20 கிலோ அரிசி மட்டுமே குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்படுவதில்லை. இதேபோல் கடந்த இரண்டு மாதங்களாக பாமாயிலும் ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால், வந்தபின்னர் பாமாயில் வழங்குகிறோம் என்று நியாய விலைக்கடை பணியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, உணவுப் பொருள் வழங்கல் துறை, நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கோதுமை, பாமாயில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் கொன்றை வே. ரெங்கசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.