தஞ்சாவூர்: கல்லூரணிக்காடு ஊராட்சியில் மயானச்சாலை சீரமைக்கும் பணி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் கல்லூரணிக்காடு ஊராட்சி உள்ளது. இங்குள்ள யாதவர் தெரு மயானச் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலையை தார்ச் சாலையாக தரம் உயர்த்தி செப்பனிட்டு தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற மாவட்ட கவுன்சிலரும், திட்டக் குழு உறுப்பினருமான அலிவலம் மூர்த்தி, 15-வது நிதிக் குழு மானியத்திலிருந்து ரூ. 5 லட்சத்து 53 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்தநிலையில் சாலை அமைக்கும் பணியை கல்லூரணிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன், ஊராட்சி செயலாளர் கலைஞானம், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், ஒப்பந்தக்காரர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.