
தஞ்சை: ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் எஸ். ஐ. க்கு 3 ஆண்டுகள் சிறை
பள்ளியக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (41). லாரி மூலம் செங்கல், மணல் ஏற்றி விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் ரமேஷ்பாபு கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 15 முதல் 16 அதிகாலை 3 மணி வரை வெண்ணாற்றங்கரையில் இருந்து மணலை லாரியில் ஏற்றினார். அப்போதைய மெலட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சுகுமார் லாரியை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து ரமேஷ்பாபுவை கைது செய்தார். பின்னர் ரமேஷ்பாபுவிடம் லாரியை பறிமுதல் செய்ததற்கான காரணம் மற்றும் பறிமுதலான பொருள்கள் பற்றிய ஆவணங்களை திருத்தவும், மணல் ஏற்றிய 4 தொழிலாளர்களை வழக்கில் குற்றவாளியாக சேர்க்காமல் இருப்பதற்காகவும் ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ்பாபு, தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார். இதன்பேரில், பிப்ரவரி 21 -இல் ரசாயனம் தடவிய பணத்தை மெலட்டூரில் மளிகைக் கடையில் கொடுத்தார். அதை உதவி ஆய்வாளர் சுகுமார், புயல்நாதனிடம் வாங்கியபோது ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகபிரியா திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்பில், சுகுமாருக்கு (68) மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.