மேச்சேரி, நங்கவள்ளியில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டம்
சேலம் மாவட்டம் நங்கவள்ளி, மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். டி. எம். செல்வகணபதி எம். பி. முன்னிலை வகித்தார். முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் டி. எம். செல்வகணபதி எம். பி. பேசும் போது கூறியதாவது: - தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். மக்களைத்தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள் முழுமையான வசதிகளை பெற்று வருகின்றனர். அ. தி. மு. க. ஆட்சியில் 100 ஏரிகளுக்கு உபரி நீர் கொண்டு செல்லும் திட்டத்தை தொடங்கி மட்டுமே வைத்தனர். ஆனால் தமிழக முதல்- அமைச்சர் ரூ. 800 கோடி நிதி ஒதுக்கியதுடன் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அனைத்து துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும். இவ்வாறு டி. எம். செல்வகணபதி எம். பி. பேசினார்.