கலெக்டரிடம் கொடுத்த மனு - சின்னசேலம் குப்பையில் கிடந்த அவலம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த காந்திமதி, சடையம்மாள், மஞ்சினி பகுதியை சேர்ந்த மருதாம்பாள், தென்னங்குடிபாளையத்தை சேர்ந்த, சுந்தரம் உள்ளிட்டோர் கடந்த 4 ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லம், சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது மனு எண் குறிப்பிட்டு, ‘சீல்’ வைத்து, ஆத்தூர் ஒன்றிய பி. டி. ஓ. , க்கு பரிந்து செய்யப்பட்டது. இந்நிலையில் இவர்களது மனுக்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் கடந்த 6 ம்ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள குப்பைகளில் கிடந்துள்ளது. இதைபார்த்த சின்னசேலம் பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவர் அந்த மனுவை பிரித்து பார்த்து அதில் உள்ள போன் நெம்பருக்கு தொடர்பு கொண்டு மனு கிடப்பதை குறித்து தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மனுதாரர் அவரிடம் கீழே கிடந்த மனுக்களை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த நபர் தபால் மூலம் குப்பையில் கடந்த மனுக்களை அனுப்பியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள், வேறு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலைய குப்பை பகுதியில் கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர். குப்பையில் மனுவை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.