கெங்கவல்லியில் பொதுகழிப்பிட மோட்டாருக்கு மின் திருட்டு

55பார்த்தது
சேலம் மாவட்டம், கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, முதலாவது வார்டு, நேதாஜி காலனி பகுதியில், கடந்த, 2020–21ல், ‘துாய்மை இந்தியா 2. 0’ திட்டத்தின் கீழ், 18 லட்சம் ரூபாயில், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.
இங்கு, 12 இருக்கைகளுடன் கட்டப்பட்ட கழிப்பிடத்துக்கு, மின் இணைப்பு பெறாததால், பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக, கடந்த, பிப். , மாதம் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, மின் இணைப்பு பெறாத நிலையில், கடந்த, பிப். , 11ல், திறக்கப்பட்டது. அருகில் உள்ள மின் கம்பத்தில் ‘கொக்கி’ போடப்பட்டு, கழிப்பிடத்துக்கு பயன்படுத்தும் மின்மோட்டருக்கு, இந்த மின்சாரத்தை பயன்படுத்தி வந்தனர்.
கெங்கவல்லி மின்வாரிய அலுவலர்கள், மின் கம்பத்தில் இருந்து, ‘கொக்கி’ போட்டு மின் திருட்டு செய்துள்ளது கண்டறிந்து, நேற்று, ஒயரை துண்டித்து விட்டனர். தொடர்ந்து, மின் திருட்டில் ஈடுபட்டுள்ள கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு, அபராதம் விதிக்கவும், மின்வாரியத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :