சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் உள்ள காப்பு காட்டில் சந்தன மரங்களை வெட்டுவதற்கு நீண்ட நாட்களாக ஆள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மண்டல வனக்காப்பாளர் ராகுல்ஆத்தூர்வனக்கோட்டா அலுவலர் ஆரோக்கியராஜ் உத்தரவின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க கெங்கவல்லி காப்பு காட்டில் கண்காணிப்பு கேமரா பல இடங்களில்பொருத்தப்பட்டது. கடந்த வாரம் காப்புக்காடு பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வலசக்கல்பட்டி பகுதியில்பொருத்தப்பட்டிருந்த கேமராவில் மூன்று நபர்கள் கத்தியுடன் வனப்பகுதியில் சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. குழு அமைத்து தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் மூவரும் கல்வராயன்மலைப்பகுதியை சேர்ந்த சந்திரன், ஆண்டி, சடையன் என தெரியவந்தது. கெங்கவல்லி வனச்சரக அலுவலர் சிவக்குமார், வனக்காப்பாளர் அப்துல் ஜலீல் மற்றும் பைத்தூர் கிழக்கு வன காவல் வனக்காப்பாளர் அரவிந்த் ஆகியோர் கொண்ட குழு கருமந்துறை பகுதிக்கு சென்று கல்வராயன் வனச்சர அலுவலர் மற்றும் அவர்களது பணியாளர்கள் உதவியுடன் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் சந்தன மரங்களை வெட்ட முயற்சி செய்ததாக வாக்குமூலம் அளித்தனர், மேலும் கெங்கவல்லி வனச்சரகத்தில் இவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அபராத தொகையை செலுத்திய நிலையில் மூவரையும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.