சூலூர்: குட்கா கடத்தல் - டாக்ஸி ஓட்டுநர் கைது
கோவை மாவட்டம் சூலூர் முத்துகவுண்டம்பூர், முதலிபாளையம் பிரிவில் தனிப்படை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான கால் டாக்ஸி ஒன்று சென்றுள்ளது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் காரை ஓட்டி வந்த நபரை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது அந்த நபர் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாண்டியன் என்பது தெரியவந்தது. இவர் பகல் நேரங்களில் கால் டாக்ஸி ஓட்டுனராகவும் இரவு நேரங்களில் குட்கா கடத்தி வந்து கோவையில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. கர்நாடக மாநிலத்திலிருந்து இந்த குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்து 2.5 லட்சம் மதிப்பிலான 365 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, ரமேஷ் பாண்டியனை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.