கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் அதிகாலை வேளையில் போலீசாரின் எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் இளைஞர்கள் சிலர் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டி ஒன்று எதிர்புறமாக வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தன்னார்வலர்கள் சிலர், இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாட்டு வண்டியை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற இளைஞரை இன்று கைது செய்தனர். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த மாடுகளின் நிலை என்னவானது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் இளைஞர்கள் சிலர் ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.