கோவை: தங்க நகை திருடிய 3 பேர் கைது
கோவை கணபதி கன்னிமார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜில் மென்ட் துரைசிங் (73). சம்பவதினத்தன்று இவர் வீட்டில் இல்லாத போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகை திருடி தப்பி சென்றனர். இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, வீட்டின் அருகே கண்காணிப்பு கேமராவில் 4 பேர் வீட்டிற்கு வந்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதை வைத்து 4 பேரை தேடி வந்தனர். இதில், நகை திருடியதாக கோவையை சேர்ந்த சவுரிராஜன் (35), சண்முகம், நடராஜ் ஆகியோரை கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இவர்கள் பல இடங்களில் பிளாட்பாரங்களில் தங்கியும், கிடைத்த கூலி வேலை செய்தும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வீடு பூட்டியிருப்பதை அறிந்த இவர்கள் பூட்டை உடைத்து திருடி விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.