மதுரை புது நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
மேலும் புது நத்தம் சாலையில் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் வேண்டும் என்பதற்காக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களாக 108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஓய்வறை இல்லாத நிலையில் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ்சிலயே தங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ தேவைக்கான மருந்துகள் வைப்பதற்கான அறை இல்லாத நிலையில் மருந்துகளை பாதுகாக்க முடியாத சூழல் உள்ளதாகவும் இது தொடர்பாக இணை இயக்குனரிடம் கூறினால் அது பொதுப்பணித்துறை முடிவு என கூறுவதால் 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர்கள் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளதால் பெண் ஊழியர்களுக்கான ஓய்வறை மற்றும் மருந்துபாதுகாப்பு அறை ஆகியவற்றை ஏற்பாடு செய்து தர கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.