மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை இழுத்து போராட்டம்
குமரி மாவட்டம் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை பகுதி களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் பழுதடைந்து பாதுகாப்பின்றி காணப்படுகிறது. இதனால் பல்வேறு விபத்துகள் நடப்பதாக புகார்கள் உள்ளன. குறிப்பாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சாலை பல இடங்களில் பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. படுகுழிகளுடன் காணப்படும் இந்த சாலையில் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த பகுதி சாலை சீரமைக்க கேட்டு பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (15-ம் தேதி) மதியம் திடீரென அந்த சாலையில் படுகுழியில் தேங்கிய வெள்ளத்தில் ஆட்டோவை ரப்பர் படகு மூலம் இழுத்து கரையேற்றுவது போன்று பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.