திற்பரப்பு அருவி சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இங்கு விடுமுறை நாட்களில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும். அந்த பகுதியில் பார்க்கிங் பகுதி உட்பட சுற்றுவட்டாரம் முழுவதும் கடைகள் நிரம்பி உள்ளன. அருவி நடைபாதை, சாலையோரம் போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளால் பெரும் நெருக்கடி ஏற்படுவதுடன் பயணிகள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று புகார் உள்ளது. இந்த நிலையில் திற்பரப்பு பேரூராட்சி சார்பில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கடை நடத்துபவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனை அடுத்து நேற்று முன்தினம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. நேற்று 28-ம் தேதி திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், செயல் அலுவலர் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக கடை நடத்துபவர்கள் அவர்களாகவே பொருட்களை அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்க நேற்று அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.