பேச்சிப்பாறை: அலெக்சாண்டர் மிஞ்சின் நினைவிடத்தில் மரியாதை
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையை கட்டிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இன்ஜினியர் அலெக்சாண்டர் மிஞ்சின் முதன்மை செயற்பொறியாளராக பணியாற்றினார். அணையை சிறப்பாக கட்டியதால் அவர் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றவர். இவர் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மலேரியா காய்ச்சல் காரணமாக இறந்தார். இவர் நினைவிடம் பேச்சிபாறை அணை அருகில் உள்ளது. அலெக்ஸாண்டர் மிஞ்சினுக்கு 157வது பிறந்த தினம் நேற்று (8-ம் தேதி) கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது நினைவிடத்தில் பொதுப்பணி துறையினர், விவசாயிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள். பொதுப்பணித்துறை சார்பில் செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், விவசாயிகள் சார்பில் மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜான்சன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சார்பில் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.