
குழித்துறை: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை; கோர்ட் தீர்ப்பு
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி மனைவி மரியாராணி (39). இந்தத் தம்பதிக்கு டார்வின் என்ற மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் குமார் (51). இவருக்கும் டார்வினுக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுஜன் குமார் தனது உறவினர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து மணியையும் டார்வினையும் அறிவாளால் வெட்டினர். இதேபோல் மணியும் டார்வினும் சேர்ந்து அந்தக் கும்பல் மீது எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுஜன்குமார் மீண்டும் தனது உறவினர்கள் ஆறு பேருடன் சேர்ந்து கொடூரஆயுதங்களால் டார்வினைக் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து டார்வின் தாயார் மரிய ராணி புகார் அளித்தார். அதன்பேரில் சுஜன் குமார் உட்பட ஆறு பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சுந்தரி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி டார்வினைக் கொலை முயற்சி செய்த சம்பவத்தில் ஈடுபட்ட சுஜன் குமாருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 5 பேரை விடுதலை செய்தார்.