வேர்க்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டலி விளை சாலையோரம் புல்லு விளைப்பகுதியில் பட்டணங்கால்வாய் செல்கிறது. இந்த பகுதி வீடுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதி ஆகும். இங்கு கால்வாயில் மருத்துவ கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.
இதில் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், சிறுநீர் பைகள் மற்றும் இரத்தப் பைகள், பழைய மருந்து உபகரணங்கள் போன்றவை கொட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இது கொட்டப்பட்டிருக்கிறது. அப்போது பட்டணங்கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாதிக்கும் ஏற்பட்ட மருத்துவ கழிவுகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. சுற்றுவட்டார சுமார் 20 கிலோமீட்டர் தூரம் மக்கள் கால்வாயை விவசாயத்திற்கும் குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். இந்த மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது பொதுமக்களில் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து வேர்கிளம்பி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து திருவட்டார் போலீசில் புகார் அளித்தனர். இந்த மருத்துவ கழிவுகள் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.