குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திங்கள்நகர் திக்கனங்கோடு வழியாக செல்லும் தோட்டியோடு - புதுக்கடை மாநில நெடுஞ்சாலை மாவட்டத்தின் முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இரவு பகல் என எப்பொழுதும் பரபரப்பாகவே இயங்கும் இந்த நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகள், காயங்கள் ஏற்பட்டு வருகிறது.
கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலை பல இடங்களில் தார் போடப்படாமலேயே கிடக்கிறது. அளவுக்கு அதிகமான வாகனங்கள் சென்று வருவதால் மேலும் மோசமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் பல்லாங்குழி சாலையாக உள்ளது. கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் கிடக்கிறது. கனரக வாகனங்கள் தினம் தினம் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றன. சமீபத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு இந்த சாலையை நேரில் வந்து பார்வையிட்டு சென்றிருந்தார். இருந்தும் சாலை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள். எனவே நெடுஞ்சாலையை விசாலமாக விரிவாக்கம் செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.