செய்யூர் கந்தசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பஜார் பகுதியில், கந்தசுவாமி கோவில் உள்ளது. 10ம் நுாற்றாண்டில், சோழர்களால் கட்டப்பட்டது. தற்போது, கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இங்கு ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த 2ம் தேதி சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம் செய்து, புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், திருவாபரணம், வெள்ளிக்கவசம் உள்ளிட்ட அலங்காரத்தில், கந்தசுவாமி காட்சி அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று கந்தசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் அருள்பாலித்த கந்தசுவாமியை தரிசனம் செய்தனர்.