செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 14ஆம் தேதி கோ பூஜை விக்னேஸ்வர பூஜை நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.
இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்கள் புறப்பாடு செய்து கலசங்கள் விமான கோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் எடுத்துச் சென்று வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி. பி ராதாகிருஷ்ணன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.