
ஈரோடு: தீ விபத்தில் சிக்கிய புது மணப்பெண்
சென்னையை சேர்ந்தவர் சரவணன் (23). இவர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சேர்ந்த கவிப்பிரியா (18) என்ற பெண்ணுடன் இவருக்கு அறிமுகம் ஆகியுள்ளது. முதலில் நட்பாகத் தொடங்கிய இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கவிப்பிரியாவுக்கு தாய், தந்தை இல்லை. பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் தெரிந்து வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சரவணன், கவிப்பிரியாவை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சரவணன் தனது மனைவியுடன் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் வசித்து வந்தார். சரவணன் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 22) இரவு கவிப்பிரியா சமையல் செய்துகொண்டிருந்தார். இதற்காக அடுப்பைப் பற்றவைத்து சமையல் செய்துகொண்டிருந்தார். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டுச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அடுப்பைப் பற்றவைக்க மண்ணெண்ணையை அடுப்பில் ஊற்றிய போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் கவிப்பிரியாவின் கை, கால், முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது 50 சதவீத தீக்காயத்துடன் கவிப்பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.