சென்னிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று மாலை 4 மணி முதல் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவமூர்த்திகள் 3 முறை கோவிலை வலம் வந்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 3 தீபங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதனை கோவிலின் 5 நிலை ராஜகோபுரத்துக்கு முன்புறம் கொண்டு வரப்பட்டது. அங்கு சரியாக மாலை 6 மணிக்கு கோவிலின் முன்புறம் உள்ள 25 அடி உயர தீபஸ்தம்பத்தில் கூரபாளையம் கார்த்திகை தீப கட்டளைதாரர்கள் சார்பில் முதல் தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள மார்க்கண்டேசுவரர்-உமையவள்ளி சன்னதி முன்புறம் உள்ள தீபஸ்தம்பத்தில் 2-வது தீபம் ஏற்றப்பட்டது. இறுதியாக கோவிலில் வெளிபுறம் உள்ள மதில் சுவரில் சிவன்மலை ஆண்டவருக்காக 3-வது தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.